சொலறியா ஆலை தீ விபத்தில் 14 தொழிலாளர்கள் படுகாயம் – நிர்வாகம் & அரசின் தொடர் அலட்சிய போக்கு

fire

புதுச்சேரியில் சொலறியா எனப்படும் தனியார் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமைடந்த தொழிலாளர்கள் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல். அதில் நான்கு தொழிலாளர்கள் 80% க்கு மேல் தீக்காயம் கொண்டவர்கள். அவர்கள் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது

சொலறியா எனும் மருந்து தயாரிக்கும் நிறுவனம் சுமார் 1500 தொழிலாளர்களை கொண்டுள்ளது. நிர்வாகம் பல கைகளில் மாறிய நிலையில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஷாஷன் ரெக்ஸ்-ல் இருந்து ஷாஷன் ஸ்ட்ரைக்ஸ் என மாறி தற்போது சொலறியா பார்மஸி என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் விபத்துகளை சந்தித்து வரும் இந்த தொழிற்சாலையின் போக்கை கண்டித்தும் , தொடர்ச்சியாக கழிவு நீரை கடலில் வெளியேற்றி சுற்றுச்சூழல் சீர்கேடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை கண்டித்தும் ஊர் மக்கள் போராட்டடங்களில் இறங்கியுள்ளனர்.

நவம்பர் 4, இரவு 9 மணியளவில் தொழிலாளர்கள் சிலர் புறப்பட்டுக்கொண்டும், சிலர் வந்துகொண்டும் இருந்த நேரத்தில், திடீரென ஏற்பட்ட பெரும் தீ பார்மாவின் ஒரு பகுதியை சூழ்ந்துள்ளது. சுமார் 100 அடி உயரம் சூழ்ந்த நெருப்பு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களுக்கும் காணப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினரின் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னரே தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாய்லர் மற்றும் தொழிற்சாலை ஆய்வாளர் வெளியிட்ட தடை உத்தரவில் பார்மா மற்றும் பேக்கிங் துறையில் இயக்கப்பட்ட TATA ACE- ல் தீப்பொறி தடுப்பான் பொருத்துவது உட்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத காரணத்தால் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தீப்பொறி வேலையிடத்தில் பரவி Vapour cloud Explosion என்று சொல்லப்படும் வெடிப்பு ஏற்பட்டு, கண்ணாடி உடைக்கப்பட்டு பார்மா மற்றும் பேக்கிங் கட்டிடம் ஒட்டுமொத்தமாக சேதமடைந்துள்ளது என்று குறிப்பிடட்டுள்ளது.

இதையடுத்து தொழிற்சாலை ஆய்வாளர் முரளி அவர்கள் வெளியிட்ட தடை உத்தரவில்,
சேதமடைந்த பார்மா மற்றும் பேக்கிங் துறை கட்டிடம் சீர்செய்யப்பட்டு, அதன் நிலைத்தன்மையை உறுதி படுத்தும் ‘stability certificate’ சமர்ப்பிக்கப்பட்டு,
தீப்பொறி தடுப்பான்களை கட்டாயமாக்கப்படும் செயல்பாட்டு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டு,
இது போன்ற விபத்துகள் எதிர்காலத்தில் நடக்காதவகையில் அங்கீகாரம் பெற்றவர்களால் பாதுகாப்பு தணிக்கை நடத்தப்பட்டு
அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை பார்மா & பேக்கிங் கட்டிடத்தின் இயக்கம் தடை செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார்.

உயிர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும் தொழிற்சாலையின் போக்கையும், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தாத தொழிலாளர் துறை ஊழல் தன்மையையும் AICCTU தொழிற்சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் சோ. பாலசுப்ரமணியன் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்.

“ஆழமான தீக்காயங்களுடன் உயிருக்கு போராடும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஆலை நிர்வாகம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், தீவிர தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு 50 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு 10 லட்ச ரூபாயும், இழப்பீடாக வழங்க வேண்டுமென” ஏ சி சி டியு கூறியுள்ளது.

தற்காலிகமாக தொழிற்சாலை மூடப்பட்டிருக்கும் சூழலில் அத்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிர்வாகம் பொறுப்பேற்கும் விதமாக, “ஆலை மூடப்பட்டுள்ள காலத்திற்கு நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கிட புதுச்சேரி அரசு உத்தரவு இட வேண்டும்” எனவும் கூறியுள்ளார்

தொழிலாளர் துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்படமால் இருப்பதும், தொழிற்சாலையின் அத்தியாவசிய பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்படாமல் இருப்பதுமே இந்த விபத்துக்கான முக்கிய காரணம் என்று குறிப்பிட்ட அவர், “அதிகாரிகள் இருந்தால்தானே வேலை செய்வார்கள். அதனால் தொழிலாளர் துறையில் உள்ள காலி பணியிடங்களை புதுச்சேரி அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்திடும் ஆய்வை தொழிலாளர் துறை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தீவிபத்தினால் ஆலையில் இருந்து ஏற்பட்ட சத்தம் மற்றும் வெளிவந்த புகையினால் அருகில் இருந்த சுனாமி குடியிருப்பில் இருந்த மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலையை இழந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி கடற்கரை கிராம பகுதிக்குச் சென்றுள்ளனர். ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற விபத்துகள் தொடரும் நிலையில், சுற்றுகுழல் சீர்கேடுகளை ஏற்படுத்தி மனித உயிர்களுக்கே ஆபத்து விளைவிக்கும் இதுபோன்ற அபாயகர ஆலைகளின் அவசியம் என்ன என்ற முக்கியமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

“சொலறியா ஆலையில் முழு பாதுகாப்பு , சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரையில் மீண்டும் ஆலை திறப்பதற்கு புதுச்சேரி அரசு அனுமதி அளிக்கக் கூடாது”- என தொழிலாளர்கள், மாணவர்கள், அப்பகுதி மக்களின் நலன் கருதி ஏஐசிசிடியு கேட்டுக்கொள்கிறது.

உயிர்களை பறித்து இயற்கையை சீர்கேடாக்கும் சொலறியா ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்ற கருத்தும், பாதுகாப்பை உறுதி செய்யும் வரை மட்டும் திறக்கக் கூடாது என்ற கருத்தும ஒரு சேர எழுப்பப்பட்டு வருவதை காண முடிகிறது. தொழிலாளர்கள், கிராம மக்கள், தொழிற்சங்கம் & சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்து தொழிலாளர்களுக்கான மற்றும் சூழலியல் நீதியை உறுதிப்படுத்துவது பொருத்தமாக இருக்கலாம். முதன்மையாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான நீதியை நாடுவதே மிக அவசியமாக உள்ளது. தடை உத்தரவில் குறிப்பிட்டது போன்று இது வெறும் ஒரு TATA ACE-ன் தவறு என்று சுருக்கி விடாமல், உபயோகிக்கப்பட்ட இரசாயனங்களின் அபாயத்தை பற்றிய தெளிவுபடுத்தத் தவறி, அதற்கான தொழில்நுட்ப கட்டமைப்பை உறுதிப்படுத்தாத நிர்வாகத்தின் பங்கு என்ன? தொழிற்சாலையின் தொடர் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு முறைகேடுகளை கண்டும் காணாமல் இருக்கும் அரசின் பங்கு என்ன? தொடர் அலட்சியத்திற்கு எதிராக தொழிலாளர்களை அணிவகுக்கத் தவறிய தொழிற்சங்கங்களின் பங்கு என்ன? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினால் இதுபோன்ற உயிர் பலியையும், நிர்வாக மற்றும் அரசின் அலட்சியத்தையும் தடுக்க முடியும்.

https://www.workersunity.com/wp-content/uploads/2023/04/Line.jpg

https://www.workersunity.com/wp-content/uploads/2023/04/Line.jpg

Subscribe to support Workers Unity – Click Here

(Workers can follow Unity’s FacebookTwitter and YouTube. Click here to subscribe to the Telegram channel. Download the app for easy and direct reading on mobile.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.