ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நாடக வடிவத்தைக் கையில் எடுக்குமா தொழிற்சங்கங்கள் ?

By Vaishnavi

கோரிக்கைகள், பொதுக்கூட்டம், போராட்டம் ரிபீட்டு (Repeat), கோரிக்கைகள், பொதுக்கூட்டம்,
போராட்டம் ரிபீட்டு (Repeat)…எனத் தொழிற்சங்க செயற்பாடுகள் சுழன்று கொண்டிருக்கும்
வேளையில் இன்னும் பற்பல உழைக்கும் மக்களை நாம் எப்படிச் சென்றடைவது என்பது ஒரு
கேள்வியாகவே உள்ளது.

இன்றைய வேலை சூழல் மற்றும் வாழ்க்கைச் சூழல்களில் தொழிலாளர்களை

ஒருங்கிணைப்பது பெரும் சவாலாக உள்ளது. பாரம்பரிய போராட்ட வடிவங்களின் பலத்தை நாம்
நிச்சயம் உள்வாங்க வேண்டியுள்ளது.

எனினும் முதலாளித்துவம் தன்னை புதுப்பித்துக்கொள்வது போலக் காலத்திற்கு ஏற்றார் போலத் தொழிற்சங்கங்களும் தன் வடிவங்களை மாற்றி அமைத்துக்கொள்வது அவசியமாகிறது.

“அய்யோ கூட்டமா” என்று ஓடும் நிலையில் இல்லாமல் ஒவ்வொரு சந்திப்பை உற்சாகமாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றக் கலாச்சார தளங்களில் அவர்களோடு இணைய புது இரத்தம்
பாய்வதுக்கான கதவுகளை நாம் திறந்தாக வேண்டியுள்ளது.

காண்ட்ராக்ட் தொழிலாளருக்கும் ESI பென்சன் சாத்தியம்!

உழைக்கும் வர்க்கத்தைப் பறைசாற்றும் பாடல்கள், வீதி நாடகங்கள், வெள்ளித்திரை படங்கள் உட்படக் கலை சார்ந்த வெளிப்பாடுகள் நம் மண்ணிற்கும் நம் மக்களிற்கும் புதிதல்ல.

எனினும் தொழிற்சங்கங்களில் கலைக்கான வெற்றிடம் இருப்பதை நாம் காண முடிகிறது. பேருரைகளுக்கு அப்பாற்பட்டு கலைகள் செய்யும் மாயங்களுக்கு வழி கொடுப்பது தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களிடம் உள்ள இருக்கத்தை இலகுவாக்குவதற்கு ஒரு பெரும் வாய்ப்பாக அமையும்.

அந்த வாய்ப்பினை உருவாக்கும் ஒரு முக்கிய கருவி  “ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நாடக வடிவம்”
(Theatre of Oppressed).

ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைப் பிரதிபலிக்கும் இந்த நாடகம் அதற்கான தீர்வுகளைப் போதிக்கும் விதமாக இல்லாமல், மக்களிடம் இருந்தே அதற்கான தீர்வுகளை வெளிக்கொள்ள முற்படுவதே இந்த நாடகத்தின் சிறப்பு.

Visit at- https://kalaadhari.com/ FB- https://www.facebook.com/Agaththi?mibextid=ZbWKwL

மக்களிடம் இருந்து மக்களுக்காகப் பரிணமித்த நாடக வடிவம்:

பிரேசிலை சார்ந்த நாடக கலைஞர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளருமான அகஸ்தோ புவால்
இக்கலையை உருவாக்க ஒரு சம்பவம் முக்கிய காரணியாக அமைகின்றது.

சிறந்த நாடக கலைஞரான அகாஸ்தோ ஒரு கிராமத்தில் ஒரு புரட்சிகரமான நாடகத்தை இயற்றி அரங்கேற்றியுள்ளார்.

“நம் இரத்தத்தைச் சிந்துவோம்” என்று முழங்கிய அந்த நாடகம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பங்கேற்பாளர்களின் பலத்த ஆரவாரத்திற்குப் பின்னர் அந்த கிராம மக்களுடன் உணவு உண்ண
அழைக்கப்படுகிறார் அகஸ்தோ.

அதனையேற்று சென்ற அகஸ்தோவிடம் அந்த கிராமத்துத் தலைவர் தன் பாராட்டுகளைத் தெரிவித்து, எப்போது நாம் மாற்றத்திற்கான வேளைகளில் இறங்கப் போகிறோம் எனக் கேட்கிறார்.

அதற்கு அகஸ்தோ "நான் ஒரு நாடக கலைஞன், இது உங்கள் பிரச்சனை நீங்கள்
தான் அதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும்" என்று விளக்கியுள்ளார்.

அதற்கு அந்த ஊர்த் தலைவர் அகஸ்தோவிடம் "அப்ப இரத்தம் சிந்துவோம் என்று நீங்கள் குறிப்பிட்டது எங்கள் இரத்தத்தை மட்டும் தானா?

உங்கள் இரத்தத்தை இல்லையா? " எனக் கேட்டுள்ளார்.

அகஸ்தோவின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த கேள்வி தீர்வுகளைப் போதிக்கும் நாடகமாக மாறாகத் தீர்வுகளைக் கண்டறியும் வழியை ஜனநாயகப் படுத்தும் நாடக வடிவை உருவாக்க ஆணிவேராக அமைந்தது .

பங்கேற்பு நாடக வடிவத்தின் தத்துவம் மற்றும் நம்பிக்கை

பங்கேற்பு நாடக வடிவம், பார்வையாளர்களை நாடகத்தைப் பார்க்கும் நபராக மட்டுமின்றி
நாடகத்தோடு உரையாடும், உறவாடும், சிந்திக்கும் நபராக மாற்றுகிறது. ஒடுக்கப்பட்டோர்
ஒவ்வொருவருக்கும் அவர் சூழலை மாற்றி அமைப்பதற்கான ஆற்றல் உண்டு என்று நம்புவதோடு, நிஜ வாழ்க்கைக்கு தங்களைத் தயார்ப் படுத்திக்கொள்ள ஒரு ஒத்திகை களமாக இந்த நாடக வடிவம் அமைகிறது.

நாடக கலைஞர்கள் அல்லாத சாமானிய மனிதர்கள் இதில் பங்கேற்பதன் மூலம் இக்கலை
சிலரது உடைமை என்ற கட்டத்தில் இருந்து நகர்ந்து அறிவு/ஆற்றல் பரவலுக்குத் தானாக வழி
வகுக்கும்

https://www.workersunity.com/wp-content/uploads/2023/01/FLOWCHART.jpg

 

நாடகத்தை பார்க்கும் நபர்கள் பங்கேற்பதா ? அதெப்படி ?

தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட நாடகத்தை எடுத்துக்காட்டாக விவரிப்பது அதற்கான பதிலாக அமையும்.

தமிழ்நாட்டில் இந்த நாடக வடிவத்திற்குப் பயிற்சி நடத்தப்பட்டு மூன்று நாடகம் இயற்றப்பட்டது. அதில் வீடுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கப்படும் வன்முறையைப் பிரதிபலிக்கும் ஒப்புதல் என்ற நாடகம்;

திரு நம்பியின் போராட்டத்தைப் பிரதிபலிக்கும் 'அவன்' என்ற நாடகம்;

தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்கள் மற்றும் பறிக்கப்படும் பத்திரிக்கை சுதந்திரம் சார்ந்து சுரண்டல் எனும் நாடகம் ஏற்றப்பட்டது.

இந்த மூன்று நாடகம் அரங்கேறிய பின்பு, நேரம் குறைவு காரணமாக ஒரு நாடகம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான தலையீடு (intervention) நிகழ்த்தப்பட்டது.

இதில் ஒப்புதல் நாடகம் தேர்வு செய்யப்பட்டு இரண்டாவது முறை அரங்கேறிய போது, மக்களில் இருந்து ஒரு பெண் ஒடுக்கப்பட்ட பெண்ணின் இடத்தை மாற்ற முற்பட்டார்.

கர்ப்பமாக இருக்கும் மருமகள், தன் மாமியாரிடமும் கணவருடனும் சிக்கித் தவிக்கும் காட்சியில், மாமியாரிடம் பேச முடியாமல் தவிக்கும் பெண்ணின் இடத்தை மாற்றிய பங்கேற்பாளர், மாமியாருடன் உரையாடலில் இறங்கி தன் ஒடுக்குமுறையைக் கையாண்ட விதம் பெரும் பாராட்டைப் பெற்றது.

இவ்வாரே, பார்வையாளர்களை பங்கேற்பாளராய் மாற்றுகிறது இந்த நாடக வடிவம்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நாடக வடிவத்தைக் கையில் எடுக்குமா தொழிற்சங்கங்கள் ?

மக்களுக்கான கலையைத் தொழிலாளர்களுக்குக் கொண்டு போவதற்கான வாய்ப்பினை உருவாக்குதல், ஒடுக்கப்பட்ட மக்களின் நுட்பமான பிரச்சினையை புரிந்துகொள்ளும் அவசியம் கொண்ட தொழிற்சங்கம் தொழிலாளர்கள் இயற்றும் கதைகளுக்குச் செவி சாய்க்குமா என்பதைப் பொறுத்து உள்ளது.

ஜனநாயக அமைப்பாகப் பறை சாற்றிக் கொள்ளும் தொழிற்சங்கம், தீர்வுகளை நோக்கிய செயற்பாடுகளை ஜனநாயகப் படுத்துவது தொழிற்சங்கத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும்.

அறிவும் ஆற்றலும் ஒரு சிலருடையது என்று குவி மையப்படுத்தாமல், பரவலாக்கப்பட வேண்டும் என்று உறுதி கொள்ளுதலும் பன்முக வடிவங்களைக் கொண்டு செல்வதற்கான தயார் நிலையே இந்த நாடக வடிவத்தைத் தொழிற்சங்கம் ஏந்தி செல்வதும் தொழிற்சங்கங்களின் பரிணாமத்தைத் தீர்மானிக்கும்.

அகத்தி மற்றும் கலாதரி இணைந்து டிசம்பர் மாதம் நிகழ்த்திய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நாடக பயிற்சிகளுக்கான முன்னெடுப்புகள் தொடரும். ஆர்வமுள்ள தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் தொடர்புக்கு கொள்ளலாம்.

Subscribe to support Workers Unity – Click Here

(Workers can follow Unity’s FacebookTwitter and YouTube. Click here to subscribe to the Telegram channel. Download the app for easy and direct reading on mobile.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.