சமூக உண்மைகளின் விட்னசாக (சாட்சியாக) நாம் இருக்கின்றோமா என்ற கேள்வியை விதைக்கும் படம் விட்னஸ்

By Vaishnavi

“அதெல்லாம் அவங்க செய்ற வேலை” எனக் காலம் காலமாக மனிதக்கழிவை அகற்றும் தொழில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த வேலையாகவே கருதப்பட்டு வரும் நிலையில்,
மலக்குழி இறப்புகள் இன்று வரை ஒரு தீராத பிரச்சனையாகவே உள்ளது .

அவர்கள் மாண்பையும், மனித உரிமையையும் குழைக்கும் காரணத்தால் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் மனிதக்கழிவுகளை அகற்ற மனிதர்களை பணியமர்த்துவதற்கான தடை மற்றும் மறுவாழ்விற்கான சட்டம் 2012 இல் போடப்பட்டது. எனினும் விட்னஸ் படத்தில் குறிப்பிட்டவாறு கடந்த ஐந்து ஆண்டுகளில், கழிவுநீர் குழாய்களையும் கழிவுநீர்த் தொட்டிகளையும் சுத்தம் செய்யும் போதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை : 340.

ஆனால் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின் படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் இதனால் ஒருவர் கூட இறக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் அரசின் இந்த போக்கு சமூகத்தின் சாதிய நிதர்சனங்களையும் , அரசின் படு தோல்வியையும் மூடி மறைக்கும் செயலே ஆகும்.

இச்சூழலில் டிசம்பர் 2022 இல்லை வெளிவந்த விட்னஸ் திரைப்படம் மிக முக்கிய படைப்பு.
உழைக்கும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு இடையே உள்ள கோட்டில் பயணிக்கும்
கதைக்களம், சாதிய உண்மைகளைக் கட்டவிழ்க்கிறது.

சமூகத்தில் ஒரு துப்புரவுப் பணியாளர் மற்றும் ஒரு கட்டிடக் கலைஞருக்குள் உள்ள இயல்பான தூரத்தை ஒரு புறம் பிரதிபலிப்பதோடு, இவர்களுடைய பொருளாதார நிலை எவையாக இருப்பினும் சமூகத்தில் இவர்கள் சந்திக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் மாறாது என்பதையும் விட்னஸ் எதார்த்தமாகப் பதிவு செய்துள்ளது. படத்தின் காட்சியமைப்புகள் கண்ணாடியை நம் முன் வந்து நீட்டுகிறது.

மனித குறுக்கீடும், அதனால் ஏற்படும் உயிரிழப்பும் சட்டென நம் கழிவறை அடைப்புகளை
நினைவுப்படுத்துகிறது. உயிரிழப்பிற்குப் பொறுப்பை ஏற்க மறுக்கும் நபர்களின் இடத்தில்
நாம் இருந்ததாலும் பொறுப்பைத் தட்டி தான் கழிப்போமோ என்று நம்மை நாமே உரசிப்
பார்க்கச் செய்கிறது.

துப்புரவு பணியாளரான இந்திராணிக்குக் கல்லூரி படித்துக்கொண்டே, நீச்சல் பயிற்றுநராக
இருக்கும் தன் மகன் பார்த்திபன் மலக்குழியில் இரங்கி இறந்து விட்டான் என்ற செய்தி
பேரதிர்ச்சியாக விடிகிறது.

இச்சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில், 'மதிப்பிற்குரிய மக்கள்' என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் குடியிருப்போர் இதற்குப் பொறுப்பேற்க மறுப்பதோடு ஸ்தானம் செய்து ஹோமம் நடத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

மாறாக அதே குடியிருப்பில் வசிக்கும் கட்டிடக் கலைஞர் பார்வதி, ஒரு முக்கிய சாட்சியை இந்திராணிக்கு ஆதரவாகக் கொடுப்பதோடு பல எதிர்ப்புகளை தனக்கே உரியக் கம்பீரத்துடன் எதிர் கொள்கிறாள். குடியிருப்பு நலச் சங்கம், காண்ட்ராக்டர், ஏரியா இன்ஜினியர், என அனைவரும் மாற்றி மாற்றிப் பொறுப்பை இன்னொருவர் மீது போட, பார்த்திபன் மரணத்திற்குப் பொறுப்பை யார் ஏற்கிறார் என்பதைச் சுவாரசியமான நீதிமன்ற காட்சிகள் மூலம் நகர்த்தியுள்ளது விட்னஸ்.

ஒரு சாமானியரின் இயலாமை, சகிப்புத்தன்மை, பதற்றம், கோவம் ஆகிய உணர்வுகளைத்
தாயாக நடித்திருக்கும் ரோஹிணி தன் எதார்த்த நடிப்பில் வெளிக்கொண்டு வந்துள்ளார்.

கேள்வியாக நிற்கும் அந்த கதாபாரத்தின் தன்மையை அவருடைய பெரும்பாலுமான
உரையாடல் வெளிப்படுத்துகிறது “என் பையன் ஏன் சார் அந்த வேலை பாக்க போரான்?" என்று காவல் துறையிடமும்” என் புள்ளைய இந்த நிலைமைக்கு ஆக்குணவன சும்மா விட சொல்றியா? “என்று தன் தம்பியிடமும்”Court ல தண்டனை கிடைக்குமா தோழர்?" என்று தொழிற்சங்க தலைவரிடமும் , ஒரு தாயாக, இந்திராணி கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும் ஒரு
பார்வையாளராய் நமக்குள்ளும் தோன்றி, கதை முழுக்க பயணித்துக் கொண்டே வருகிறது.

கடந்து போக முடியாத கதாபாத்திரமாகப் பக்கத்துக்கு வீட்டு மரியம் இருக்கிறாள். ஒரு
உறவாக, சகோதரியாகப் பேரிழப்பைச் சந்திக்கும் இந்திராணியுடன் மலைபோல் நிற்கும்
மரியத்தின் காட்சிகள், உழைக்கும் மக்கள் வாழும் குடியிருப்புகளில் மட்டுமே இது சாத்தியம்
என்பதை நிரூபித்துக்கொண்டே உள்ளது. இந்திராணி தரப்பில் வாதிடும் வழக்கறிஞர் மீது
இயற்கையாக ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும் சமயத்தில், நீதியின் பக்கம் நிற்கும்
காட்சிகள், சமூகத்தில் மிஞ்சி இருக்கும் நம்பிக்கை வெளிச்சமாகவே தெரிகிறது .

இவர்களுக்கு போராட்டத்தைத் தவிர ஒன்றும் தெரியாது என்று பொதுவாக நாம் ஒதுக்கி
வைக்கும் தருணத்தைக் கொஞ்சம் அருகில் சென்று பார்த்து அதன் நியாயம் அனைவருக்கும்
விளங்கும் வண்ணம் அமைகிறது போராட்ட கள காட்சிகள். குறிப்பாக கம்யூனிஸ்ட்
தொழிற்சங்க தலைவராக பெத்தராஜ், காவல் துறை அதிகாரிகளுடன் நடத்தும் நிதானமான
மற்றும் சாதாரணமான உரையாடல்கள் போராட்டத்தை ஏற்புடையதாக்குகிறது. பார்த்திபன்
இரங்கல் போஸ்டர் ஓட்டுவதைத் தடுத்த காவல் அதிகாரியிடம் தாத்தா பதில் சொல்லும் காட்சி கதையின் கருவாக அமைந்துள்ளது.

பொய்யாக மருத்தவ ரிப்போர்ட் கொடுத்த மருத்துவரிடம் நீதிபதி லைசன்ஸ் ரத்து
செய்யட்டுமா என்று பள்ளி குழந்தையை மிரட்டுவது போல் சாதாரணமாகக் கேள்வி கேட்கும்
காட்சி சற்று ஏற்புடையதாக இல்லை.

மேலும் ஏரியா இன்ஜினீர், காண்ட்ராக்டர் ஆகியவர்களின் நீதி மன்ற காட்சி அல்லது தொலைப்பேசியில் பேசும் காட்சியில் மட்டுமே வருவதால் அவர்களின் வேலை, பொறுப்பு, அவர்களின் கட்டமைப்பு காட்சிப்பதிவாக (visually) காட்டப்படாத காரணத்தால் ஏனோ அதனை புரிந்துகொள்வது கடினமாக இருந்தது.

பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான கிளைமாக்ஸ் காட்சியில் தீர்ப்பு அமைந்த விதம் நிதர்சனத்தைப் போட்டு உடைத்து, உரையாடலை ஏற்படும் விதத்தில் அமைகிறது.

நேரான கதை நடை, படத்தோடு ஒன்றிய பாடல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள், காலத்தின் கட்டாயமான கதைக் கரு கொண்ட இப்படைப்பு கழிவறை உபயோகிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.

Subscribe to support Workers Unity – Click Here

(Workers can follow Unity’s FacebookTwitter and YouTube. Click here to subscribe to the Telegram channel. Download the app for easy and direct reading on mobile.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.